2 முடிவைச் சொல்லிவிடு (பாகம் 2)

                                                                                       

”என்ன பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம். லீசியை வரச் சொல்லிட்டன். இப்ப அவ வந்திடுவா….”

”நீயே எல்லாம் செய்துவிட்டு பிறகு ஏன் என்னட்டக் கேட்கிறாய்…. நடக்கட்டும். பிறகு ஏதாவது பிரச்சினை என்றால் கண்ணைக்கசக்கிக் கொண்டு நிற்காதேயும்….”

மதனின் சலிப்பான பதிலில் எதிர்கால வாழ்வின் பயம் இருந்தது. ஆனால், சிந்துவின் உடனடி முடிவில் ஆத்மதிருப்தி இருந்தது.

கற்பப்பையின் பலவீனம் குழந்தைப் பாக்கியத்தை தடுத்துவிட்டது. இனியொரு வாரிசு இவளால் தாங்கமுடியாது என்னும் வேதனைப் பாரம் இதயத்தில் பெரும் பாறாங்கல்லைத் தூக்கி வைத்துவிட்டது. பாறாங்கல்லை இறக்க வேண்டுமானால், தன் கருமுட்டையை இறக்கவேண்டும். சிந்தித்ததில் செயல் ஒன்று சிறப்பாய் நடத்த முடிவு எடுத்தாள். லீசி என்ற ஒரு போலந்து நாட்டு நட்பொன்றின் உதவியை நாடினாள். லீசியின் கருப்பையில் சிந்துவின் கருமுட்டையும், மதனின் விந்தணுவும் ஒன்றாக இணைந்து வளர லீசியிடம் சம்மதம் வாங்கினாள். நீண்ட போராட்டத்தின் மத்தியில் மதனின் சம்மதம் கிடைத்தது.

”அவளின் செலவுகளுக்கு என்ன செய்யப்போகின்றாய். ஆரோக்கியமான குழந்தைக்கு அவசியமான சத்துணவுகளை நாமல்லவா கொடுக்கவேண்டும்….”

”ஓமப்பா…. நான் எல்லாம் கதைத்துப்போட்டன். எங்களுடைய மேல்வீடு இன்னும் வாடகைக்கு விடாமல்தானே கிடக்குது. அதில லீசியை குடிவரச் சொன்னேன். நாங்க பார்த்துக் கொள்ளலாம்தானே. பிள்ளைக்கு வேண்டிய சத்துணவெல்லாம் கொடுக்கலாம். அது எங்கட பிள்ள தானே… எங்கட பிள்ளப்பா… ”

இரண்டு கைளையும் மேலேஉயர்த்தி ஆரவாரம் செய்தாள்.

”ஓஹோ … இவ்வளவும் கதைச்சநீ பிறகு எதுக்கு என்னிடம் இதைச் சொல்றாய். அதையும் நீயே பார். உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. உன்னால முடியாது என்றால் ஒரு பிள்ளையை தத்தெடுப்போம். நல்லா வளர்ப்போம். அத விட்டுப்போட்டு யாரோ போலந்துக்காரியிட்ட எங்களை தொடர்பு படுத்தி…. இதெல்லாம் சரிவரும் என்று எனக்குப்படல்ல….”

”எதுக்குத்தான் நீங்க ஒத்துவர்றீங்க….. அது எங்கட பிள்ள. தத்தெடுக்கும்பிள்ள எங்கடதில்ல….” கண்ணைக்கசக்கினாள். பொலபொலவென்று குழாய்நீராய் கண்ணீர் வடிந்தது. சிந்திய மூக்கில் மதனின் கல் நெஞ்சம் கரைந்தது.

”சரிசரி…. அவள் வரட்டும்”

இருவரின் உறவுக்கும் இணைப்பாகப் போலந்து உறவொன்று புகுந்து கொண்டது. ஐரோப்பியர்களுக்கு பாசம் குறைவென்றுதானே நாமெல்லாம் கருதுகின்றோம். அவ்வாறுதான் மதன் சுதா தம்பதிகளும் கருதி தமிழ்ப்பெண்ணைவிட்டு போலந்துப் பெண்ணிடம் தஞ்சம் அடைந்தனர்.
அழைப்புமணி அதிர்ஸ்டமணியாய் அலறியது. 1000 வார்ட் மின்சாரம் சிந்து முகத்தில் பிரகாசித்தது. பூசிவைத்த சில்வர் பாத்திரம் போன்ற முகப்பொலிவுடன் முன்னே வந்த லீசியை வரவேற்ற இருவரும் வரவேற்பறையில் அமர்ந்தனர்.

முதலில் மதன் தொடங்கினான்.

”லீசி பிள்ளை வளரும் காப்பகம் உன் கருப்பை. பிள்ளை எங்களுடையது. உயிர் நாங்கள் உறை நீ. நீ சுகதேகியானாலேயே எங்கள் பிள்ளை சுகமாகப் பிறக்கும். நீ மகிழ்ச்சியாய் இருந்தாலேயே எங்கள் பிள்ளை மகிழ்ச்சியான பிள்ளையாய் பிறக்கும். உயிரொன்று உன் உடலுள் வளர்கின்ற போது உயிரைக் கொல்லும் எந்த போதைவஸ்துக்களையும் உன் அருகே கொண்டுவராதே. உன் தேவைகளை நாங்கள் பார்க்கின்றோம். பிள்ளையின் தேகத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது நீ பார்த்துக்கொள். எங்கள் எதிர்காலத்தை நீ சுமக்கப்போகின்றாய் வாழ்நாள் முழுவதும் உன்னைத் தாங்குவோம். இந்தச் சேவைக்கு எந்தச் சேவையும் இணையாகாது. உன்னில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை எவ்வேளையும் குறைந்து கொள்ளாமல் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. இப்போது டாக்டரிடம் போவோம்”

லீசியின் சம்மதம் இருவருக்கும் சர்க்கரையைக் கரைத்துப் பருகக் கொடுத்தது. அந்தரத்தில் பறக்கும் ஆனந்தத்தை அள்ளிக் கொடுத்தது.

சிந்துவின் வாய்களிலிருந்து எந்த வார்த்தைகளும் வெளிவரவில்லை. கண்ணீர் மட்டுமே கன்னங்களில் வரிகள் போட்டுக்கொண்டிருந்தது. இறுதியாக லீசியின் கைகள் இரண்டையும் தன் கைகளினுள் புதைத்தாள் தன் உள்ளம் முழுவதும் அவளிடம் மண்டியிட்டு நன்றி கூறியது. அவளை அணைத்தெடுத்தாள். ஆயிரம் வார்த்தைகள் அவ் அணைப்பில் இருந்தது.

தோள்மீது மகவொன்று தூங்கும் இன்பம்
தொல்லைகளை தூரவீசும் நிலையான இன்பம்
இல்லமதில் இணையவரும் நாள் பார்த்து
இமைதூங்கா காத்திருக்கும் காவலர்கள் இவர்கள்

License

முடிவைச் சொல்லிவிடு Copyright © 2014 by kowsy. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *