“ம்….”
“காலையில் வேலைக்குப் போகவேணுமல்லவா…..”
“உழைச்சு உழைச்சுத்தான் என்னத்தக் கண்டோம்”
“இதென்ன இந்த நேரத்தில் பேசும் பேச்சா. பேசாமப்படு நாளைக்குக் கதைப்பம். கண்டதையும் நித்திரையில் போட்டுக் குழப்பாதையும். இப்படித்தான் என்றால், இப்படித்தான். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேணும்….“
இவருக்கெங்கே புரியப்போகிறது. என் மனம் படும்பாடு. சிந்தனை மனதுக்குள் புகுந்துவிட்டால். மூளை அதுபற்றித்தானே வேலை செய்யும். நித்திரை கொள்ள சம்மதிக்குமா. என்னை நான் மறந்தாலேயே என் மூளை களைத்துக் கண்ணை மூடச்செய்யும். அதுதான் முடியாது முனகுகின்றேனே. நேரத்தைப் பார்த்தாள் சிந்து அதுவோ ஓடுவதாக இல்லை. ஒரு செக்கனுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படும்போல் இருந்தது. “சீ……”என்றபடி எழுந்தமர்ந்தாள். அறைக்கதவை சாத்திவிட்டு சமையலறையினுள் எதிர் கொள்ளும்; நாளுக்கு எந்திரமானாள்.
உடலுக்கு உரமேற்றும் உணவுகள் உதவிட உத்தரவுகேட்டு சமையலறை மேசையில் தயாராக இருந்தன. விடிகாலைப்பொழுது தன் கடமைக்காய்த் தயாரானது. அலாரச்சத்தத்துடன் இணைந்தே மதனின் குரலும் ஓங்கி ஒலித்தது.
“சிந்து….. சிந்து…..”
“என்னப்பா…. ”
“இந்த அலாரத்தை நீ மாற்றல்லையா? அதனுடைய கடமை உணர்ச்சிக்கு அளவேயில்ல. சொல்லிட்டம் என்ரதுக்காக விடாது அடித்துக்கொண்டே இருக்குது. நாங்க இன்றைக்கு வேலைக்கு லீவெல்லோ எடுத்தோம். டொக்டர்ட்ட Termin இருக்கல்லவா…”
“சரிசரி எழும்புங்க. நான் மறந்திட்டன். டொக்டரிட்டப் போகமுன் உங்களோட கொஞ்சம் கதைக்க வேண்டியிருக்கு”
நீண்ட பெருமூச்சுடன் சூடு பறக்கும் தேநீர் மெல்லமெல்ல உற்சாகம் ஏற்ற சிந்து வார்த்தைகளை மதன் மனம் மென்று கொண்டிருந்தது.
Feedback/Errata